சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதியின் நூல் வெளியீடு
சிறிலங்கா விமானப்படையின் ஒன்பதாவது தளபதியான எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் நினைவுக் குறிப்புகளான- ‘ஒரே தேசமாக, ஒரே மக்களாக நிலைத்திருத்தல்’ (To Survive as One Nation, One People) என்ற நூல், கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 16ஆம் நாள் கொழும்பு கிங்ஸ்பரி விடுதியில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் மார்ஷல் றொசான் குணதிலக, தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, சிறிலங்கா இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முன்னாள் தளபதிகள், மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சார்ஜன்ட் விமானி பதவியிலிருந்து விமானப்படைத் தளபதி வரை படிப்படியாகப் பதவி உயர்வு பெற்ற எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் முப்பது ஆண்டுகாலப் பணி வாழ்க்கை, சிறிலங்காவின் வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டங்கள் சிலவற்றைக் கொண்டிருந்தது.
1985-ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சரின் அரசமுறைப் பயணத்தின் போது, யாழ்ப்பாணக் கோட்டையைப் பாதுகாக்க 250 படையினரை வான்வழியாக தரையிறக்கிய இரவுநேர நடவடிக்கையின் போது அவர் தனிப்பட்ட முறையில் ஒரு விமானியாக செயற்பட்டிருந்தார்.
மேலும், 1995ஆம் ஆண்டு அவரது தலைமையின் கீழ், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே துல்லியமான இலக்கு நிர்ணயத்திற்காக ஆளில்லா வான்வழி வாகனங்களைப் (UAVs) பயன்படுத்திய முதல் விமானப்படையாக சிறிலங்கா விமானப்படை மாறியது.
தனது புத்தகத்தில், ஒலிவர் ரணசிங்க இந்த வரலாற்று நிகழ்வுகளையும், சிறிலங்கா விமானப்படையின் செயற்பாடுகள் குறித்த அதிகம் அறியப்படாத உண்மைகளையும், தேசத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த தனது தனிப்பட்ட எண்ணங்களையும் பகிர்ந்துள்ளார்.




