அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்
சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிபிசி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சிறிலங்கா வாக்காளர்கள் கோத்தாபயவிற்கு வாக்களித்துள்ளனர்.
இந்த வெற்றியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
தமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ச தரப்புடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், புதிய அதிபர் அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி.
அதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும்.
புலிகள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்கள் இருந்தபோது பெரும் வன்முறை இருந்தது.
இப்போது தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்கள் வாய்ப்புகளைப் பெற முயல வேண்டும்.
தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சாதாரணமான விடயம்தான். தேர்தலில் தாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிபெறவில்லை என்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம்.
ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள், அதிபருடன் பேசி கோரிக்கைகளை வைக்க வேண்டும்.
சிறிலங்கா முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. தவிர, கோத்தாபய இந்தியாவோடு நெருக்கமாகவே தான் இருந்திருக்கிறார்.
ஆகவே, அவர் அதிபராக வருவதால் சிறிலங்கா – இந்திய உறவில் ஏதும் மாறாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து சிறிலங்கா அரசுடன் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறது. நரசிம்மராவ் துவங்கி, யார் பிரதமராக இருந்தாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
ஆகவே கோத்தாபய அதிபராகியிருப்பதால் எதுவும் மாறிவிடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.