மகிழ்வுடன் மீண்டும் இணைகிறோம்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.
கொரோனா பேரிடர் மற்றும் அதற்குப் பின்ரான சூழல்கள், உலகை முற்று முழுதாகவே மாற்றியமைத்து விட்டது.
பொருளாதார நெருக்கடிகளும், பூகோள அரசியல் போட்டிகளும், சர்வதேச அரசியல் சூழமைவுகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்த ஐந்து ஆண்டுகள் என்பது மிக மிக நெருக்கடியானது.
கடுமையான சூழ்நிலைகளையும், பொருளாதார வீழ்ச்சிகளையும் தாங்கிக் கொண்டே – தாண்டிக் கொண்டே பயணிக்க வேண்டிய நிலையில் உலகம் இன்றுள்ளது.
ஊடகப் பரப்பிலும் கூட இந்த ஐந்து ஆண்டுகள் மிக மிக சவாலானது.
ஊடகப் பெருவெளியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
பாரம்பரிய அச்சு ஊடகங்களின் ஆதிக்கம், கொரோனாவுக்கு பின்னர் வெகுவாகக் குறைந்து போய் இருக்கிறது.
அச்சு ஊடகங்கள் சேடம் இழுக்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றன.
இணைய ஊடகங்களும் கூட சமூக ஊடகங்களுடன் போராட முடியாமல் தள்ளாடுகின்றன.
ஒரு காலத்தில், ஒரு செய்தியை அல்லது தகவலை நாளிதழ் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பல நாட்கள் கூட ஆகியிருக்கும்.
பின்னர் தொலைபேசி வசதிகள் வந்த பின்னர், ஒரு செய்திக்கான காத்திருப்புக் காலம் 24 மணி நேரமாக சுருங்கியது.
இணைய ஊடகங்களின் வருகைக்கு பின்னர், அது மணித்தியாலங்களாக குறைந்தது.
கொரோனாவுக்கு பின்னர் அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு ஊடாக, டிஜிட்டல் முறையில் தங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு வந்தன.
இது அச்சு ஊடகங்களின் பக்கம் இருந்த கவனம், முற்று முழுதாக திறன்பேசிகளுக்குள் முடங்குகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
திறன்பேசிகள் ஊடாக, உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது ஒரு முன்னேற்றகரமான விடயமாகவே இருந்தாலும்- தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவையாக இருப்பதும், பொறுப்புணர்வு அருகிப் போயிருப்பதும் பெருங்குறைபாடாக மாறியிருக்கிறது.
சமூக ஊடகங்கள் தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களை கொட்டுகின்ற களமாக மாறி இருக்கிறது.
பக்கச் சார்பும், காழ்ப்புணர்வும், நடுநிலை பேணப்பட வேண்டிய ஊடக தர்மத்துக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒருபக்கம் பாரம்பரிய ஊடகத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதும், இன்னொரு பக்கம், நவீன ஊடகங்கள் பொறுப்புக்கூறும் அறமின்றி விட்டேந்தியாகச் செயற்படுவதும், ஊடகத்துறைக்கான பெரும் சவால்.
இந்தச் சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையையும், அரசியல் அபிலாசைகளையும், அதற்கான வழிமுறைகளையும், சரியான முறையில் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து விலகி நிற்பது பொருத்தமல்ல.
தமிழ்ச் சமூகம் இன்று பேரவலங்களைச் சந்திக்கிறது.
தாயகத்தில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலும், உரிமை அரசியலுக்கான போராட்டமும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
இந்தச் சூழலில், ஊடகப்பரப்பில் எமக்கான கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, என்றும் கடமைப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்.
போருக்குப் பின்னரான சூழலில் புதினப்பலகை எந்தளவுக்குப் பொறுப்புணர்வுடனும், முன்னுதாரணமாகவும் ஊடகப் பரப்பில் செயற்பட்டு, உங்களின் நம்பிக்கையைப் பெற்றதோ அதேவழியில் தொடர்ந்தும் பயணிப்போம்.
-புதினப்பலகை குழுமத்தினர்.