ஓராண்டுக்குள் மோசமடைந்துள்ள உள்நாட்டுப் பொருளாதார நிலைமை
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (Center for Policy Alternatives) அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பிற்குப் பதிலளித்தவர்களில் 51.4சதவீதமானோர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் 18.2 சதவீதமானோர் மட்டுமே, உள்நாட்டுப் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
30.3சதவீதமானோர் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சிங்களவர்களில் 53.9 சதவீதமானோரும், தமிழர்களில் 44.1 சதவீதமானோரும், முஸ்லிம்களில் 49.2 வீதமானோரும், மலையக தமிழர்களில் 29.6 சதவீதமானோரும், மோசமடைந்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிங்களவர்களில் 29.4 சதவீதமானோரும், தமிழர்களில் 30.3 சதவீதமானோரும், முஸ்லிம்களில் 35.2 வீதமானோரும், மலையக தமிழர்களில் 33.3 சதவீதமானோரும், அதேநிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை, சிங்களவர்களில் 16.6 சதவீதமானோரும், தமிழர்களில் 25.5 சதவீதமானோரும், முஸ்லிம்களில் 15.6 வீதமானோரும், மலையக தமிழர்களில் 37 சதவீதமானோரும், கடந்த ஓராண்டில் வீட்டுப் பொருளாதார நிலை முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
