மேலும்

செவ்வாயன்று கொழும்பு வருகிறார் ராஜ்நாத் சிங்- நுவரெலியாவுக்கும் பயணம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள்  அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும்  8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து சிறிலங்கா தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 9 ஆம் நாள் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்துவார்.

இந்திய-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது  குறித்த மீளாய்வும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அடங்கும்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிலும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியாவிற்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *