மேலும்

100 மில்லியன் ரூபா இலஞ்சம் – நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்  கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலையில்  முன்னிலையான நாமல் ராஜபக்சவினடம்  ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது நாமல் ராஜபக்சவை 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக  எயர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக இடம்பெறும்,  விசாரணைகளுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ்  விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ரூ.100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் BIZ Solutions INC என்ற பெயரில் பராமரிக்கப்படும் கணக்கில்  1,454,651.24 யூரோ லஞ்சமாகப் பெறப்பட்டதாகவும், அந்தத் தொகையில் இருந்து 800,000, அமெரிக்க டொலர் சிறிலங்கா தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான Sabre Vision Holdings Ltd என்ற நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிதிகள் தொடர்பாக, நாமல் ராஜபக்ச 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பலமுறை அந்த தொழிலதிபரிடமிருந்து மொத்தம் ரூ.100 மில்லியனைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

தொழிலதிபர் அளித்த வாக்குமூலம், பிரான்சைச் சேர்ந்த எயர்பஸ் தாய் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆணையத்திடம் அளித்த வாக்குமூலங்கள், அத்துடன் விசாரணையின் போது திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *