மேலும்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை பிணையில் விடுவித்த நீதிமன்றம்

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம  உத்தரவிட்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டில் சிறிலங்கா கடற்படையின் நிறைவேற்று அதிகாரிகள் பிரிவில்,  யோஷித ராஜபக்சவை ஆட்சேர்ப்பு செய்த விடயத்தில், மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வசந்த கரன்னகொட இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ச, நிறைவேற்றுப் பிரிவில் ஒரு மிட்ஷிப்மனாகப் பணியமர்த்தப்பட்டதாகவும், ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு மாறாக,  பிரித்தானியாவில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் அரச செலவில் பயிற்சி பெற அனுப்பப்பட்டதாகவும்,  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்ற ஒரே காரணமே,  சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட நீதிவான், வசந்த கரன்னகொடவை தலா ரூ. 2.5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்குமாறு, உத்தரவிட்டதுடன், அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.

சந்தேக நபர் சாட்சிகளைப் பாதிக்கவோ அல்லது விசாரணையில் தலையிடவோ முயன்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவரைத் தொடர்ந்து காவலில் வைப்பதற்குப் போதுமான காரணங்களை அரசுத் தரப்பு வெளியிடத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *