திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்- தேசிய சமாதானப் பேரவை எச்சரிக்கை
சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை அகற்றப்பட்டதும் ஒட்டுமொத்த சமூகங்களையும் பாதிக்கும் குறைகளாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்றும் தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.
இது நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்தையும், அரசியல், சிவில் சமூக மற்றும் மத அமைப்புகளையும் தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
“அனோஜன் வழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளையும், முஸ்லிம் தலைவர்கள் உட்பட அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் விடுத்த கருணைக்கான வேண்டுகோள்களையும் தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது.
முஸ்லிம், பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்த நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இது, ஒரு சிறிலங்கா குடிமகனின் உயிர் அனைத்து இலங்கையர்களின் அக்கறைக்குரியது என்பதையும், அவருக்கு கருணை கோருவது எந்தவொரு மதத்திற்கும் எதிரானது அல்ல என்பதையும் நிரூபிக்கும்.
குறிப்பாக, அரசியல், சிவில் மற்றும் மதத் தலைவர்கள் இந்த வழக்கை முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வின் அல்லது கூட்டுப் பழியின் ஆதாரமாக மாற்றும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும்.
இந்த உணர்வில்தான் தேசிய சமாதானப் பேரவை அனோஜனுக்கான கருணை வேண்டுகோளில் இணைகிறது.
திலீபன் சிலை, வேறுபட்ட -ஆனால் தொடர்புடைய ஒரு சமாதானத்தை உருவாக்கும் கவலையை எழுப்புகிறது.
இந்திய-சிறிலங்கா சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை எதிர்த்து பன்னிரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்து, 1987 செப்ரெம்பர் 26 ஆம் நாள் மரணித்த திலீபனுக்கு பல தமிழர்கள் ஆழ்ந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்த ஆண்டு நினைவு நாளில் நிறுவப்பட்ட சிலை, செப்ரெம்பர் 27 ஆம் திகதி காவல்துறையினரால் அகற்றப்பட்டது.
தடைசெய்யப்பட்ட அமைப்பாகத் தொடரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒருவரை நினைவுகூருதல் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் சட்டரீதியான கவலைகளை எழுப்பியுள்ளது.
ஆனால், தமிழர்களின் துயரத்தின் ஆழத்தைப் புறக்கணிக்க முடியாது. திலீபனை நினைவுகூருதல் என்பது பல தமிழர்களுக்கு துக்கம், இழப்பு மற்றும் வரலாற்று நினைவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீட்டு அலுவலகச் சட்டம், அதன் பரந்த இழப்பீட்டுக் கட்டமைப்பிற்குள் நினைவுகூர்தல் தொடர்பான கொள்கைகளை வழங்குகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இழப்பீட்டு அலுவலகத்துடன் கலந்துரையாடி, சட்டத்திற்குள் பொருத்தமான நினைவுகூர்தல் முறையை உள்ளடக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வழிநடத்தும் ஜே.வி.பி.யே, ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது, பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்தது, இப்போது பல ஆண்டுகளாக உயிர்நீத்த தனது சொந்த உறுப்பினர்களை பகிரங்கமாக நினைவுகூர்ந்து வருகிறது.
சட்டத்திற்கு உட்பட்டு, இறந்தவர்களை நினைவு கூரும் வாய்ப்பு ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதாக இருக்கக் கூடாது.
அனோஜன் மற்றும் திலீபன் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிறிலங்கா தனது கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.
சமாதானத்தை நிலைநாட்டுதல் என்பது, இன்றைய கடினமான பிரச்சினைகளை நாளைய இனப் பிரிவினைகளாக மாறுவதைத் தடுக்கும் வழிகளில் கையாளும் திறன் ஆகும்.
சிறிலங்காவில் தொடரும் அமைதியே, சிறிலங்காவின் உண்மையான சோதனை என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
