அலைபேசி, மடிகணினி கடவுச்சொற்களை வழங்க சுரேஷ் சாலேக்கு நீதிமன்றம் உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, தனது அலைபேசி, மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதிவாதி தரப்பால் முன்னர் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நீதிவான் இன்று உத்தரவுகளை வழங்கினார்.
குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்குமாறு, சுரேஷ் சாலே தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் இன்று நிராகரித்துள்ளார்.
அத்துடன், சந்தேக நபரான சுரேஷ் சாலே காவலில் இருக்கும்போது, சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான நாளிதழ்கள், எழுத்துப்பூர்வமான பொருட்கள் மற்றும் சட்ட விதிகளை வழங்க அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவையும், நீதிவான் நிராகரித்தார்.
மேலும், குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக அமையாத ஒரு வாக்குமூலத்தை, நீதிவான் முன்பாக அளிக்க அனுமதிக்குமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின் கீழ் விடுத்த கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்; அத்தகைய வாக்குமூலம் நடைபெற்று வரும் புலனாய்வுகளில் தலையிடக் கூடும் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், முதல் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்களுக்கு எதிராக, மேலதிக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற அடிப்படையில், அவர்களை விடுவிக்கக் கோரிய மனுவையும் நீதிவான் நிராகரித்தார்.
மூன்றாம் சந்தேக நபரான சுரேஷ் சாலேவைப் பொறுத்தவரை, அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை நீதிவான் அனுமதித்தார்.
மேலும், எதிர்கால நீதிமன்ற நாள்களில் அவரை மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டார்.
மூன்றாம் சந்தேக நபரை சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு நீதித்துறை மேற்பார்வை கோரிய கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்ரெம்பர் 2 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கவும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சாலே
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய, சுரேஷ் சாலே, தனது சட்ட ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.
பெப்ரவரி 25 ஆம் நாள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சாலே, தன் மீதான விசாரணைகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயை நீக்க வேண்டும் என்றும், தன்னை வேறு தடுப்புக்காவலுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் உணவை உண்ண மறுத்த போதும், குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த, நிலையில், சட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சாலே, உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போது முடிவு செய்துள்ளார்.
