ராஜ்நாத் சிங்கின் பயணம்- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும், அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகள் குறித்து, இந்தச் சந்திப்புகளின் போது, முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
