மேலும்

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால்  ஆறு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகவும், மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா படையினர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்களை விடுவித்து அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அத்துடன், இந்த உத்தரவை அனுராதபுரம் மேல்நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த வழக்கில் இரு நீதியரசர்களும் தனித்தனி தீர்ப்புகளை எழுதினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பின்போது செய்யப்பட்ட சில பதிவுகளைக் குறிக்க அரசுத் தரப்பை அனுமதிக்காததன் மூலம், மேல்நீதிமன்ற நீதிபதி தவறிழைத்துவிட்டார் என்ற  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வாதத்தை,  மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில், அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரப்பூர்வ கையொப்பம் இல்லாததால், அவற்றை விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதிக்காதது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று தனது தீர்ப்பில், குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நீதிபதி பிரேமச்சந்திர தனது தீர்ப்பில், அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரப்பூர்வ கையொப்பம் மற்றும் நாள் இல்லாததை மேல்நீதிமன்ற நீதிபதி தீர்மானிக்கும் காரணியாகக் கருதியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

“கேள்விக்குரிய சாட்சியம் ஏற்றுக்கொள்ளத் தக்கதா மற்றும் மதிப்பீடு செய்யப்படக் கூடியதா என்பதில் நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

1996 பிப்ரவரி 11 ஆம் நாள், குமாரபுரத்தில், இடம்பெற்ற இந்த படுகொலைகள் தொடர்பாக, ஆறு சிறிலங்கா இராணுவத்தினர்  மீது அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் 101 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அவர்கள் 2016 ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *