செம்மணிப் புதைகுழி தொடர்பாக 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதம்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் துறவறத்தினரும் ஆகிய நாம், இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சிறிலங்காவின் ஆயுத மோதலின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் அனைவரையும் குறித்த ஆழ்ந்த மேய்ப்புப்பணிசார் அக்கறையால் இம்மடலை எழுதுகின்றோம்.
2025 ஜூன் மாதத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அமைவிடத்துக்கு தாங்கள் மேற்கொண்ட வருகையை நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
உண்மைக்கும் நீதிக்கும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தங்களது வருகை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்தது.
2025 பெப்ரவரி மாதத்தில் செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் அச்சமூட்டும் அளவில், மனித எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
2026 ஜூலை 21ஆம் திகதி, குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட, குறைந்தது 454 எலும்புக்கூட்டு எச்சத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்களும், நாள்களும், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதும் இதுவரை இறுதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விசாரணையின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, நம்பகமான சான்றுகள் இன்றி எவர் மீதும் பொறுப்பைச் சுமத்தவோ நாம் விரும்பவில்லை.
இருப்பினும், இப்புதைப்புகளின் அளவும் சூழ்நிலைகளும், வெளிப்படையானதும் அறிவியல் ரீதியில் நம்பகமானதும் உண்மையை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வல்லதுமான சுயாதீன அனைத்துலக விசாரணை ஒன்றை அவசியமாக்குகின்றன.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்லியல் ஆய்வுக் குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க பணியை நாம் அங்கீகரிக்கின்றோம்.
இருப்பினும், தடயவியல் திறன், விசாரணைச் சுயாதீனம், சான்றுகளைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல், குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் எழுப்பியுள்ள கரிசனைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல பத்தாண்டுகளாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன அனைத்துலக விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை நாம் முழுமையாக ஆதரித்து அவர்களுடன் இணைகின்றோம்.
எமது ஆராய்ந்தறிந்த நிலைப்பாட்டின்படி, செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டவற்றின் அளவும் சூழலும், தமிழ் மக்கள் அனுபவித்துவரும் பரந்த கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையின் தெளிவான அறிகுறியாகும்.
இந்த அம்சம் அனைத்துலக சட்டத்துக்கிணங்க தகுதியும் சுயாதீனமும் கொண்ட அனைத்துலக பொறிமுறை ஒன்றினால் ஆராயப்பட வேண்டும்.
எனவே, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்கள் பணியகத்திடம் நாம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்:
செம்மணி- சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான சுயாதீன அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்து வழிவகுக்கவும் அதற்குப் பொருத்தமான அனைத்துலக தடயவியல் நிபுணத்துவம், மேற்பார்வை மற்றும் நிறுவனச் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், பரிசோதித்தல், அடையாளத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய அனைத்தும் மினசோட்டா நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் பொருந்தக்கூடிய ஏனைய அனைத்துலகத் தரநிலைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவும்.
சுயாதீன மரபணு பகுப்பாய்வு, அறிவியல் கால நிர்ணயம், பொருத்தமான தனியுரிமைப் பாதுகாப்புகளுடன் குடும்ப ஒப்பீட்டுக்கான மரபணு மாதிரிகளைத் தன்னார்வ அடிப்படையில் சேகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நம்பகமான அடையாள உறுதிப்படுத்தல் செயல்முறைக்கு ஆதரவளிக்கவும்.
விசாரணையாளர்கள் தொடர்புடைய அனைத்து இராணுவ, காவல்துறை, தடுப்புக்காவல் மற்றும் அரசாங்கப் பதிவுகளையும் அணுக முடிவதையும், உரிய சட்ட நடைமுறையையும் குற்றமற்றவர் என்ற சட்ட முன்னனுமானத்தையும் மதித்தவாறு தனிநபர் மற்றும் நிறுவனப் பொறுப்பை நிலைநாட்ட முடிவதையும் உறுதிசெய்யவும்.
குடும்பங்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோரைப் பாதுகாத்து, அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிசெய்யவும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாணர் பணியகத்தின் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (OHCHR Sri Lanka Accountability Project), அதன் ஆணை வரம்புக்குள் முன்னேற்றங்களைக் கண்காணித்து, அதனுடன் தொடர்புடைய சான்றுகளைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளவும்.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை அடையாளம் காண முன்வரும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நேரடி இருப்பு அவசியம் என நாம் கருதுகின்றோம்.
2026 ஜூலை 29 அன்று வெளியான உதயன் நாளிதழில், செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளவர்கள் தமது உறவினர்கள் என எவரும் உரிமை கோரவில்லை என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.
மக்கள் மௌனமாக இருப்பதற்கான முதன்மைக் காரணம் பயமும் சிறிலங்கா அரசாங்க நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையும் ஆகும்.
சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம்.
எலும்புக்கூட்டு எச்சங்களின் ஒவ்வொரு தொகுதியும் மீறப்பட முடியாத மனித மாண்புடைய ஒரு நபரையும், துயரத்துடனும் நிச்சயமின்மையுடனும் வாழும் ஒரு குடும்பத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எமது வேண்டுகோள் எந்தவொரு சமூகத்துக்கோ நிறுவனத்துக்கோ எதிரான பழிவாங்கும் எண்ணத்தாலோ பகைமையாலோ தூண்டப்படவில்லை.
சான்றுகளால் நிறுவப்படும் உண்மை. சட்டத்தின்படி வழங்கப்படும் நீதி, இறந்தோரின் மாண்பு மற்றும் சிறிலங்காவின் அனைத்து மக்களுக்கும் உண்மையான நல்லிணக்கம் ஆகியவற்றையே நாம் நாடுகின்றோம்.
இந்த விசாரணையை முன்னெடுத்து குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தங்கள் பணியகமும் ஏனைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை விளக்கும் எழுத்துமூலப் பதிலுடன், தங்களது அவசரத் தலையீட்டை மரியாதையுடன் கோருகின்றோம் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
