மேலும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் – அனைத்துலக தரத்துடன் விசாரணை நடத்த வேண்டும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து அனைத்துலகத் தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறிலங்காவிடம் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின், நாடாளுமன்ற இணைச் செயலாளர் கிறிஸ் எல்மோர் கடந்த வாரம்  நாடாளுமன்றத்தில் தனது எழுத்துப்பூர்வ  பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் தொடர்பான முன்னேற்றங்களை பிரித்தானியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் அவசியம் குறித்து சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம்.

இந்த விசாரணையில் வலுவான தடயவியல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், காணாமல் ஆக்கப்படுதலால்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலும் இடம்பெற வேண்டும்.

அகழ்வாராய்ச்சிகள் தொடர்வதால், அனைத்துலக உதவியைப் பரிசீலிக்குமாறு நாங்கள் ஊக்குவித்துள்ளோம்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படல் தொடர்பான பிரச்சினைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியா தொடர்ந்து எழுப்பி வருகிறது.

முன்னாள் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர், கடந்த மே மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்த சிறிலங்கா பிரதமருடன் இந்தப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

முன்னாள் பிரதிப் பிரதமர், 2026 பிப்ரவரியில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது அவற்றை எழுப்பினார்.

மிக அண்மையில், கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன், வலிந்து காணாமலாக்கல்கள் குறித்து கலந்துரையாடியதுடன்,  யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கான அனுசரணைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதன் மூலமும், ஐ.நா.வின் தற்போதைய பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், சிறிலங்காவின் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் பிரித்தானியா உறுதியாக உள்ளது என்றும்,  கிறிஸ் எல்மோர் அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *