மேலும்

தலைமறைவானார் ஞானசார தேரர் – தேடிச் சென்ற சிறை அதிகாரிகள் ஏமாற்றம்

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக, நேற்றுமுன்தினம் ராஜகிரியவில் விகாரைக்குச்  சிறை அதிகாரிகள் சென்றபோது, ​​கலகொட அத்தே ஞானசார தேரர் அங்கு இல்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜகிரியா, நாவல வீதியில் உள்ள விகாரைக்குச் சென்ற சிறை அதிகாரிகளிடம், ஞானசார தேரர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள்  அதிபர் மைத்திரிபால சிறிசேன 2019-ல் ஞானசார தேரருக்கு வழங்கிய பொது மன்னிப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதென அறிவித்த ஒரு நாள் கழித்து, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கின் போது, ​​2016 ஜனவரிய மாதம் ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரரின் நடந்து கொண்டு முறையினால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

2018ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு  ஆறு ஆண்டுகள்  சிறைத் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கும்படி விதித்தது.

சுமார் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த அவருக்கு, 2019 மே 23ஆம் நாள் மைத்திரிபால  சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *