மேலும்

வங்காள விரிகுடாவில் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்துள்ளது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே இதுதொடர்பான கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை  சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற 5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிராந்திய பாதுகாப்பு என்பது பரஸ்பர நம்பிக்கை, தொடர்ச்சியான உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம், இணையவழி அச்சுறுத்தல்கள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல், தவறான தகவல், மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் போன்ற சவால்களை, நாடுகள் மட்டும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்றும், அவற்றுக்கு கூட்டு நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் ஒரு முக்கிய தளமான பிம்ஸ்டெக், பிராந்தியத்தில் அமைதி, உறுதித்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்றும்,

அதிகரித்த  புலனாய்வு மற்றும் தகவல் பகிர்வு வழிமுறைகள், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு, மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புத் திறன்கள், மற்றும் பிராந்திய நிறுவனங்களிடையே வலுவான ஒத்துழைப்பு  இருக்க வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையேயான புவியியல்  நெருக்கம், அமைதியான, மீள்திறன் கொண்ட மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கான மூலோபாய ஒத்துழைப்பாக மாற்றுவதற்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், சிறிலங்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் மூத்த் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவான பிராந்திய பாதுகாப்பு கவலைகள் மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *