பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 24 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
பிள்ளையான் இன்று மெய்நிகர்முறையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐந்து படுகொலைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவர் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, கல்லடியில் நடந்த பல கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரித்தது
இதன்போது, சாட்சிகள் சாட்சியமளித்ததோடு, பிள்ளையான் சார்பில் இரண்டு சட்டவாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
2008-ஆம் ஆண்டில் ரி-56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பல துப்பாக்கிச் சூடுகள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், இந்த விசாரணை நடைபெறுவதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவரைக் கொன்ற, கல்லடி முருகன் கோவில் அருகே 2008 ஜனவரி 9 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு,
இருவர் உயிரிழந்த, காத்தான்குடி பிரதான வீதியில் 2008 மே 22 அன்று நடந்த தாக்குதல்,
வவுணதீவு, கொத்தியாபுவவில் 2008 ஓகஸ்ட் 20 ஆம் திகதி மற்றொரு நபர் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களில் பிள்ளையனுக்குத் தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமர்ப்பிப்புகளை ஆய்வு செய்த பின்னர், நீதிவான் தர்ஷினி பிள்ளையானின் நீதிமன்றக் காவலை ஜூலை 24 ஆம் நாள் வரை நீடித்தார்.
