யாழ்ப்பாணத்தில் இன்று “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமாகியது.
வெள்ளை வான் கடத்தல்களை நினைவுபடுத்தும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்கள் பொறிக்கப்பட்ட வாகனம் பேரணியின் முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாண நகரப் பகுதி ஊடாக நகர்ந்த பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது.
அங்கு அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.







