மேலும்

பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

”பல இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயர் நிறுவனமும் ஒன்று” என, சிறிலங்கா சிவில் விமானசேவை அதிகார சபையின்,  விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்தார்.

எயர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில், உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்துக்கு இயக்கக் கூடிய, 70 – 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும்,  48 ஆசனங்களைக் கொண்ட  ஒரு ATR 42-320 விமானமும் உள்ளது.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிறிலங்காவில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கமும், இந்தியாவில் பாஜக அரசும் ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் கொழும்புக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போயிங் B737 மற்றும் எயர்பஸ்  A320 விமானங்களை இயக்கக் கூடிய வகையில், சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒக்ரோபர் மாதம் இங்கிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்“ எனவும், ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புகளான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில், குறுகிய காலஅவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பலாலியில் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. பலாலி் விமான நிலையம் செயற்பாட்டுக்கு வரும் போது நாங்களும் எமது பணிகளை ஆரம்பிக்கத் தயாராக இருப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *