சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு
சிறிலங்காவுக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
எஸ்எல்என்எஸ் பராக்கிரம என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலை ஆணையிட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது,
இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் நளீந்திர ஜெயசிங்க, சிறிலங்கா அதிபரிடம் இருந்து போர்க்கப்பலுக்கான ஆணையை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், கடற்படை, இராணுவ, விமானப்படை தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் பிரதானி மற்றும் சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
1994 கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 112 மீற்றர் நீளமும், 12.4 மீற்றர் அகலமும் கொண்டது. 2300 தொன் எடை கொண்ட இந்தக் கப்பலில், 18 அதிகாரிகள் உள்ளிட்ட 110 மாலுமிகள் பணியாற்றுவதற்கான வசதிகள் உள்ளன.
சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல், ஆழ்கடலில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடல் எல்லைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் கீழ் இந்தப் போர்க்கப்பல் இயங்கவுள்ளது.
சீனாவின் ஷங்காய் துறைமுகத்தில் கடந்த ஜூன் மாதம் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் போர்க்கப்பல், ஜூலை மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.



