மட்டக்களப்பில் ஆளைக் கடத்தி கொலை செய்த 8 ஈபிடிபியினருக்கு மரண தண்டனை
2008 ஆம் ஆண்டு ஏறாவூரில் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக, ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாள், செங்கலடியில் அமைந்திருந்த ஈ.பி.டி.பி முகாமிலிருந்த உறுப்பினர்கள் குழுவொன்று, தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை சிற்றுந்து ஒன்றில் கடத்திச் சென்று, அவரைக் கொன்று, சடலத்தைப் புதைத்த பின்னர், அந்த இடத்தின் மீது வாழை ஒன்றை நாட்டியதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏறாவூர் காவல்துறையினர் ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு விசாரணைக்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீண்டகாலமாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுந்தும் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கின் இன்று தீர்ப்பளித்த, மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி டி.ஜே. பிரபாகரன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எட்டு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பதாவது நபரை, வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
