கடல்சார் பாதுகாப்பு தேசிய எல்லைகளைத் தாண்டிய பிரச்சினை- தென்கொரிய தூதுவர்
தெற்காசியாவில் கடல்சார் பாதுகாப்பு ஒரு பிராந்தியப் பிரச்சினை மட்டுமல்ல, அது உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு விவகாரம் என்று, சிறிலங்காவுக்கான தென்கொரியத் தூதுவர் கிம் யூன்-ஜங் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தென் கொரியத் தூதரகம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிராந்திய கடல்சார் ஆய்வு மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘கொரியா-சிறிலங்கா -அவுஸ்ரேலியா-பிரான்ஸ் கடல்சார் பாதுகாப்பு மன்றத்தில்’ உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகிலேயே மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக மிக முக்கியமான இடத்தில் உள்ளது.
அனைத்துலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி போக்குவரத்திற்கு இந்தியப் பெருங்கடல் ஒரு முக்கிய பாதையாக இருப்பதால், இந்தப் பகுதியின் கடல்சார் பாதுகாப்பு என்பது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக மாறியுள்ளது.
அனைத்துலக அமைதிக்கான கார்னகி என்டோவ்மென்ட் (Carnegie Endowment for International Peace) அமைப்பின் தரவுகளின்படி, உலகின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 80 சதவீதமும், உலகளாவிய சரக்குக் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகின்றன.
இந்த புள்ளிவிவரங்கள், உலகப் பொருளாதாரத்தில் இப்பகுதி வகிக்கும் முக்கியத்துவத்தையும், அதன் கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.
கடல்சார் பாதுகாப்புச் சூழல் மேலும் சவாலானதாக மாறி வருகிறது. நாடுகள் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பாரம்பரிய பாதுகாப்பு கவலைகளுக்கு மேலதிகமாக, சட்டவிரோத மீன்பிடி, கடல்வழி கடத்தல், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போன்ற சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது.
இத்தகைய சவால்கள் பெரும்பாலும் தேசிய எல்லைகளைத் தாண்டிச் செல்பவை; எனவே, ஒரு நாடு மட்டும் தனியாகச் செயல்படுவதன் மூலம் இவற்றைத் திறம்பட எதிர்கொள்ள முடியாது.
இதற்கு பிராந்திய நாடுகளுக்கும், பரந்த அனைத்துலக சமூகத்திற்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல், பரஸ்பர புரிதல் மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு அவசியம் என்றும் தென்கொரிய தூதுவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், எயர் வைஸ் மார்ஷல் இந்திக விக்கிரமசிங்க,
கடல்சார் சூழல் மேலும் சிக்கலானதாக மாறி வருகிறது.
பாரம்பரிய பாதுகாப்பு கவலைகளுடன், கடல்சார் தகராறுகள், சட்டவிரோத மீன்பிடி, மனிதக் கடத்தல், முறையற்ற இடம்பெயர்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கடல்சார் குற்றங்கள் போன்ற புதிய மற்றும் நாடுகடந்த சவால்களும் தற்போது இணைந்துள்ளன.
தேசிய எல்லைகளைத் தாண்டிய இந்தச் சவால்களை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.
நிலையான கடல்சார் பாதுகாப்பிற்கு பரஸ்பர நம்பிக்கை, தகவல் பரிமாற்றம், அனைத்துலக சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் வலுவான பிராந்திய மற்றும் அனைத்துலக கூட்டாண்மைகள் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு, பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் பிரான்ஸ் தூதரக முதன்மைச் செயலர் ஷரினி மக்யூவன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
