மேலும்

மீண்டும் படைபலத்தை வெளிப்படுத்தவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வு

galle face parade (1)சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்புகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில், முப்படைகளின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெறுவது வழக்கம்.

இதில் சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் போரிடும் திறனை வெளிப்படுத்தும் வகையில், போர்த்தளபாடங்களின் அணிவகுப்புகள் இடம்பெறும்.

எனினும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த ஆண்டு சுதந்திர நாள் நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்காவின் முப்படையினரின் அணிவகுப்பு மாத்திரம் இடம்பெற்ற போதிலும், போர்த்தளபாடங்கள், இராணுவ வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள் என்பன இடம்பெறவில்லை.

galle face parade (1)galle face parade (2)galle face parade (3)galle face parade (4)

ஆனால், இம்முறை புதிய அரசாங்கம் மீண்டும் காலிமுகத்திடலில், 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளை நடத்த ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

வரும் பெப்ரவரி 4ஆம் நாள் நடத்தப்படவுள்ள சுதந்திர நாள் நிகழ்வு, காலை -மாலை என இரண்டு நிகழ்வுகளைக் கொண்டதாக இடம்பெறவுள்ளது.

காலையில், கொடியேற்றல் மற்றும் இராணுவ அணிவகுப்புகளும், மாலையில் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்கள், போர்த்தளபாடங்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு மீண்டும் இடம்பெறவுள்ளது.

‘ஒரே நாடு, பெரும் பலம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுதந்திர நாள் அணிவகுப்பில், இடம்பெறும் போர்த்தளபாடங்கள், வாகனங்கள் கடந்த சில நாட்களாக, காலி முகத்திடலில் ஒத்திகை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *