மத்திய கிழக்கிற்கான ஏற்றுமதிகள் தடைப்படும் ஆபத்து
மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு வரவிருக்கும் கப்பல்கள் இதுவரை எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை.
ஆனால், மத்திய கிழக்கின் பதற்றங்கள் பிராந்திய கடல்சார் இயக்கங்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் செயற்பாட்டு வசதிகளை பல கப்பல்கள் கோரியுள்ளன. அவற்றுக்குத் தேவையான சேவைகளை வழங்க அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகளில் கப்பல் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அவை அந்த இடங்களுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை ஏற்றுமதியாளர்கள் உள்ளூர் துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
