மேலும்

சிறிலங்கா நீதியை உறுதி செய்ய அனுசரணை நாடுகள் குழு அழுத்தம்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் அனுசரணை நாடுகள் குழு ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில்  நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில் நேற்று, பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் (Eleanor Sanders),  கனடா, மலாவி, மொன்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, சிறிலங்கா அனுசரணை நாடுகள் குழுவின் சார்பாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“கடந்த நவம்பரில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்புக்கு சிறிலங்காவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

மோதல்களின் போது, ஏற்பட்ட இழப்புகளை வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட சமூகங்கள் நினைவுகூர அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

நல்லிணக்கத்திற்கு நினைவுகூருதல் மிக முக்கியமானது, மேலும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவும், பயன்படுத்தாமல் இருக்கவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு,  முன்னையதை விட அதிகமான கவலைகளை எழுப்புகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறிலங்காவின் மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு இணங்க வேண்டும்.

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சில நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், விடுவிக்கும் வேகம் மிகவும் மெதுவாகவே உள்ளது.

நிலைமாறுகால நீதி, இனவெறி எதிர்ப்பு மற்றும் அடையாள மனித உரிமைகள் வழக்குகள் குறித்த அதிபரின் அண்மைய உறுதிமொழிகளை நாங்கள் கவனிக்கிறோம்; இருப்பினும், உறுதியான முடிவுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.

முக்கிய நிறுவனங்கள் பலவீனமாகவே உள்ளன, மேலும் வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

மனித உரிமைகளை நிலைநிறுத்த வலுவான, சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள் மிக முக்கியமானவை.

திட்டமிடப்பட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகம் செயற்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இறுதியாக, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணயைாளர் பணியகத்தின் அறிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம், மேலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களை மதிக்கிறோம்.

இதுதொடர்பாக சிறிலங்கா ஆக்கபூர்வமாக செயற்படவும், சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும்  வலியுறுத்துகிறோம்.“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *