மேலும்

சிறிலங்கா பொருட்களுக்கு 10 வீத வரியை அறிவித்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் பொருட்களுக்கு  10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 60 நாடுகளின் இறக்குமதிகள் மீது 10 தொடக்கம் 12.5 வீதம் வரை, புதிய வரிகளை விதிப்பதாக  அறிவித்துள்ளார்.

இதில் சிறிலங்கா  10வீதம் என்ற குறைந்தபட்ச வரி விதிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விநியோகச் சங்கிலிகளில் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று, கூறி அமெரிக்கா இந்த வரிகளை அறிவித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, கனடா, பங்களாதேஸ், இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், மலேசியா, கம்போடியா மற்றும்  சிறிலங்கா உள்ளிட்ட 17 நாடுகளுக்கு  10சதவீத குறைந்தபட்ச வரி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட இறக்குமதிகளைத் தடை செய்துள்ள, பரஸ்பர வர்த்தக உடன்பாடுகள் மூலம் அத்தகைய நடவடிக்கைகளைச் செயற்படுத்த உறுதியளித்துள்ள, அல்லது ஏற்கனவே பகுதி கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இந்த 10 வீத வரி வீதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையின் கீழ் ஆய்வு செய்யப்படும் ஏனைய  நாடுகள் 12.5 வீதம் ​​என்ற அதிகபட்ச வரியை எதிர்கொள்கின்றன.

அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, தாய்வான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 10 வீதம் அல்லது 12.5 வீத ​​வரியும் விதிக்கப்படும்.

இந்தப் புதிய வரிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *