மேலும்

குறைமதிப்பிற்குட்படுத்துவதற்குப் பதிலாக ஐ.நாவை ஆதரவளிக்க கோருகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக,  ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்து, ஜெனிவாவில் உள்ள  ஐ.நாவுக்கான தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான சுமித் தசநாயக்க, உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அண்மைய எழுத்துப்பூர்வ அறிக்கை தொடர்பில் சிறிலங்கா கவனத்தில்  கொண்டுள்ளது.

பேரவையுடனான சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட உறுதிபூண்டுள்ளது.

பேரவையை நிர்வகிக்கும் கோட்பாடுகளுக்கு அமைவாக, சிறிலங்காவின் நிலைமை சமநிலையான, புறவயமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்றும்  நாங்கள் பேரவையை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியிலும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதையும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அதேவேளையில், நியாயமான மற்றும் நீதியான ஒரு நாட்டை உருவாக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் (External evidence mechanism) அதிகார ஆணை நீடிப்பு உட்பட, 60/1 தீர்மானத்தை  சிறிலங்கா ஆதரிக்கவில்லை.

இத்தகைய பொறிமுறை சிறிலங்காவில் உள்ள சமூகங்களுக்கு இடையே பிளவுகளை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் உண்மையான நல்லிணக்கச் செயல்பாட்டையும் சீர்குலைக்கக் கூடும்.

நல்லிணக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.

இணைய பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் காணாமற்போனோருக்கான பணியகம் மற்றும் இழப்பீட்டுக்கான பணியகம் ஆகியவற்றின் ஊடாக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான வரைவு கட்டமைப்பு தற்போது பரிசீலனையில் உள்ளது.

சுதந்திரமான வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்று தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களின் தகுதி அல்லது பதவி நிலையைக் பொருட்படுத்தாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதியுடன் இருக்கிறது.

அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, நாட்டில் தீவிரவாதம் அல்லது இனப் பிளவுகள் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

வழக்குகளை விரைவுபடுத்தவும், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருக்கிறது.

தேசிய முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, அத்தகைய செயல்முறைக்கு முன்னேற்றத்தை அங்கீகரித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை தேவை என்றும் சிறிலங்கா பிரதிநிதி சுமித் தசநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *