மேலும்

2030இல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருவாய் இலக்கு

2030-ஆம் ஆண்டிற்குள் சிறிலங்காவுக்கு 10 பில்லியன் டொலர் சுற்றுலா வருவாயை ஈட்டுவது மற்றும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பாக நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில்  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,  சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, சிகிரியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு 10 புதிய அனைத்துலக விமான நிறுவனங்கள் சிறிலங்காவுக்கு விமான சேவைகளைத் தொடங்கியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தேசிய பூங்காக்களை, வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள உலகளாவிய விளம்பரப் பரப்புரைகளின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை முறைப்படுத்தும் நோக்கில், அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிட சேவை வழங்குநர்களையும்  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யக் கட்டாயப்படுத்துவதன் மூலம், அவர்களை உரிய சட்டக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறிலங்காவின் சட்ட நடைமுறைகளை மீறி வெளிநாட்டினரால் நடத்தப்படும் வணிகங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *