ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது ஆபத்து
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான தெளிவான வரையறை இல்லாததால், இது சிவில் உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
1979-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை’ மாற்ற வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும், முன்மொழியப்பட்ட புதிய சட்டம் சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கைகளைக் கூட குற்றச் செயல்களாக மாற்றக்கூடும்.
சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமொன்றைக் கைவிடுமாறு வலியுறுத்தி அரசியல் பரப்புரைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது அரசாங்கத்தின் முன்னெடுப்பு ஒன்றிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் கூட, பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குத் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் அதிகாரம் வழங்கும் பிரிவுகள் இதில் உள்ளன.
இத்தகைய அதிகாரங்கள் ஊடகங்களின் செயல்பாடுகளை முடக்கவும், மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.
அவசரகால நிலை நடைமுறையில் இல்லாத சூழலில், ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
இத்தகைய ஏற்பாடுகள் ஜனநாயக நடைமுறைகளைச் சிதைத்து, நீதித்துறை சார்ந்த பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்யும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில், சந்தேக நபர்களை நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் பிரிவுகள் உள்ளன.
ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம்; மேலும், அதை நீடிக்கவும் வாய்ப்புள்ளதால், தனிநபர்கள் நீண்ட காலம் சிறைவைக்கப்படும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், போதுமான நீதித்துறை மேற்பார்வையின்றி ஒருவரைத் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் சூழலை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
இது ஜனநாயக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
