சிறிலங்காவில் அமெரிக்காவின் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்தக் குழு ஜூலை 27 முதல் 30 ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஹௌலஹான், காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் தரவரிசை உறுப்பினராகவும், அவையின் புலனாய்வுக்கான நிரந்தரத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
கொழும்பில் இருக்கும்போது, இந்தத் தூதுக்குழு, பல்வேறு இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரைாடுவதற்காக, சிறிங்கா அரசாங்க, இராணுவ மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தும்.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இவர்களின் சந்திப்பு பட்டியலில் உள்ளனர்.
இந்தப் பயணம், சிறிலங்காவுடனான வலுவான இருதரப்பு உறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
இது, நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பது, வர்த்தக உறவுகளையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஆழப்படுத்துவது, பிராந்திய உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னிறுத்துகிறது என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

