மேலும்

சிறிலங்காவில் டெங்கு ஒழிப்பில் களமிறங்கிய அமெரிக்க போர்த் திணைக்களம்

சிறிலங்காவில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க போர்த் திணைக்களமும் களமிறங்கியுள்ளது.

இதற்காக,  கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிறிலங்கா சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, ஒரு பொது சுகாதார பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் நோய்க்கடத்தி வழி நோய் பதிலளிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்கப் போர் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதாபிமான, பேரிடர் மற்றும் சிவில் உதவி (OHDACA) திட்டத்தின் மூலம் இதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின்  பசுபிக் இராணுவம் (USARPAC) மற்றும் அமெரிக்க இராணுவத்தின் 18வது கள மருத்துவக் கட்டளையின் நிபுணர்கள், சிறிலங்கா சுகாதார அமைச்சின் நிபுணர்களுடன் ஒன்றிணைத்து, தடுப்பு மருத்துவம், நோய் கண்காணிப்பு, பூச்சியியல் மற்றும் ஒருங்கிணைந்த நோய்க்கடத்தி முகாமைத்துவத்தில் அமெரிக்க நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கொழும்பில் நடத்தப்படும் இந்த கூட்டு முயற்சி, சிறிலங்காவில் நாடு தழுவிய டெங்கு பதிலளிப்புக்கு ஆதரவளிப்பதோடு, நுளம்பு இனப்பெருக்க இடங்களை ஒழிக்கும் முயற்சிகள், பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் முன்கணிப்புத் தடுப்பு முறைகளுக்கும் துணைபுரிகிறது.

சிறிலங்கா  முழுவதும் உள்ள குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் டெங்கு தொடர்ந்து ஒரு கடுமையான சவாலாக உள்ளது,

இந்தக் கூட்டாண்மை மூலம்,  தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் நோய்க்கடத்தி கட்டுப்பாடு ஆகியவற்றில் தனது அமெரிக்கா நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இது இன்றைய நோய்ப் பரவலுக்கு எதிரான சிறிலங்காவின் பதிலடியை வலுப்படுத்துவதோடு, வரும் ஆண்டுகளில் சிறிலங்கா சமூகங்களைப் பாதுகாக்கும் நீடித்த திறன்களையும் உருவாக்கும் என அமெரிக்கத் துணை தூதுவர் ஜெயின் ஹோவல்  தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, CARAT மற்றும் Atlas Angel போன்ற பயிற்சிகள் மற்றும் மொன்டானா தேசியப் பாதுகாப்புப் படையுடனான பயிற்சிக் கூட்டாண்மை ஆகியவற்றில், இராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் பாதுகாப்பு, மீள்திறன் மற்றும் தயார்நிலையை ஊக்குவிக்கும் பரந்த மற்றும் நீடித்த அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மையைப் பிரதிபலிக்கிறது.

இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகள் முதல் டெங்கு போன்ற பொது சுகாதார அச்சுறுத்தல்கள் வரையிலான பொதுவான சவால்களுக்குப் பதிலளிக்கத் தேவையான திறன்களை அமெரிக்காவும் சிறிலங்காவும் இணைந்து உருவாக்குகின்றன.

இது தேசிய மீள்திறனை வலுப்படுத்துவதோடு, மேலும் பாதுகாப்பான இந்தோ-பசுபிக் பகுதிக்கு பங்களிக்கிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *