மேலும்

றோகண விஜேவீர கொலை – மேஜர் ஜெனரல் தோரதெனியவின் மனு தள்ளுபடி

ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீர கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய தொடர்புபட்டிருந்தார் என குற்றம்சாட்டி வெளியிடப்படும் கருத்துக்களை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பல சமூக ஊடகத் தளங்கள் மற்றும்  முன்னிலை சோசலிசக் கட்சி மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

றோகண விஜேவீர படுகொலை செய்யப்பட்ட போது, சிறிலங்கா இராணுவத்தில் ஒளிப்படவியலாளராக  பணியாற்றிய இந்திரானந்த டி சில்வா, தாம் இந்தச் சம்பவத்தை பார்த்த ஒரு நேரடி சாட்சி என்றும்,  அப்போது சிறிலங்கா இராணுவ அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய, அந்தக் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து,  அவற்றின் வெளியீட்டைத் தடுக்கக் கோரி, மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த கொழும்பு மேல்நீதிமன்றம், தோரதெனியவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

காவலில் இருந்தபோது ஜேவிபி தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, இந்திரானந்த டி சில்வா ஓராண்டுக்கு முன்னரே, குற்றப் புலனாய்வுத்துறையில்  முறைப்பாடு  அளித்திருந்தார் என்றும், அத்தகைய விசாரணையில் நேரில் கண்ட சாட்சியாக சாட்சியம் அளிக்க அவர்  விருப்பம் தெரிவித்திருந்த போதும், இன்னமும் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *