மேலும்

ஒற்றையாட்சி முறை நீடித்தால் நாடு பிளவுபடும் – சுமந்திரன்

Sumanthiranசிறிலங்காவில் ஒற்றையாட்சி முறை நீடித்தால், நாடு பிளவுபடும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து முன்னேற வேண்டுமாகவிருந்தால் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு மிகமுக்கியமானது.இந்த அரசியலமைப்பே இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பிலான புதிய முறைமையை அறிமுகம் செய்வதாகவும் இருக்கும்.

நாடு சுதந்திரமடைந்த காலம் முதல்,  எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் சம அந்தஸ்துள்ள குடிமக்களாக வாழமுடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடுமென நாம் கூறுவதில்லை. அரசிலமைப்பை மாற்றுவதன் ஊடாகவும் புதிய உறவுமுறையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் தீர்வுக்கான ஆரம்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு மாற்றம் முக்கியமானதாக காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பொறிமுயை தொடர்பான விவாதம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்றமை துரதிஷ்டவசமானது.

கடந்த ஒன்பதாம் நாள் ஆரம்பிக்கப்பட்ட விவாதம் பிற்போடப்பட்டு பெப்ரவரியில் எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு பொறிமுறையை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட்டு பங்களிப்பை செய்யவேண்டுமென சிறிலங்கா அதிபர் கரிசனை காட்டுவதனாலேயே இவ்வாறு பிற்போடப்படுகிறது.

அதிபரின் இந்த நியாயமான கரிசனையை உணராது பிற்போக்கு சக்திகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள பிற்போக்கு சக்திகளுக்கு இடமளிக்கும் வகையில் அரசாங்கம் முன்வைத்த காலை பின் வைக்காது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லவிதமான செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருக்கிறோம். கடந்த ஒருஆண்டு காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறைவாக இருந்தாலும் கூட தொடர்ச்சியாக அச்செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

அனைத்து தரப்புக்களின் ஒப்புதலுடன் அரசியலமைப்பு தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மலினப்படுத்தப்படாது முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும்.

அதிகாரப்பகிர்வு என்பது இந்த நாட்டிலே புதிய விடயமொன்றல்ல. இலங்கை சுதந்திரமடைந்து ஒரு ஆண்டு காலத்தினுள்ளேயே கோரப்பட்டதொன்றாகும். பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானங்களை எடுக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதால் குறித்த மக்களின் குடியுரிமையே பறிக்கப்பட்டது.

1949 ஆம் ஆண்டு தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டு சமஷ்டி முறையிலான ஆட்சி கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

தற்போது பல உயிரிழப்புக்களுக்கு பின்னர் ஆட்சி அதிகாரங்களை அனைவரும் கையாளக்கூடிய வகையிலான அரசியலமைப்பு அவசியமென்பது உணரப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தவிடயம் தாமதிக்கப்படாது முன்னெடுக்கப்படவேண்டும்.

அரசியல் தீர்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை நாம் கடந்த பொதுத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அந்த நிலைப்பாடானது முதல்முறையாக வைக்கப்பட்டதொன்றல்ல. 2010ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு ஆணை பெறப்பட்டு வந்துள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு எம்மால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு அடங்கிய தேர்தல் அறிக்கையை ஏற்று மிகப்பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிருங்கள் எனக்கோரிக்கை விடுத்து தமது அரசியல் அபிலாஷைகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதனைத் தட்டிக்கழிக்க முடியாது. செவிசாய்க்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்கள் இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் பெரும்பான்மையானவர்களின் எண்ணிக்கையை தட்டிக்கழிக்காது ஜனநாயக ரீதியாக தீர்வுகாண வேண்டும். பேரினவாதத்தினால் அமிழ்த்தப்படக்கூடாது.

பேரினவாதக்கொள்கையினால் 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்புச் சபையில் பெரும்பான்மை எண்ணிக்கையால் சொற்ப அதிகாரப் பகிர்வு கூட நிராகரிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதும் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை. முதன் முறையாக தற்போது அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்கள் பங்கு பற்றுகின்றார்கள்.

நாம் முழுமையான பங்களிப்பை வழங்கி ஒத்துழைப்புகளை நல்க தயாராகவுள்ளோம். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்தச் வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கைவிடப்படக்கூடாது.

தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்வந்துள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தை கைநழுவ விடக்கூடாதென பெரும்பான்மை மக்களும் தமது தலைவர்களுக்கு அழுத்தமளிக்கவேண்டும்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே 1926ஆம் ஆண்டு இந்த நாட்டில் சமஷ்டி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர். அப்போது வெளிவந்திருந்த சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் ஐந்து கட்டுரைகளை எழுதியிருந்ததோடு யாழ்ப்பாணத்தில் சிறப்பு சொற்பொழிவையும் ஆற்றியிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி முறைமை இலங்கைக்கு பொருத்தமானதெனவும் கூறியிருந்தார்.

1931ஆம் ஆண்டு கண்டியத் தலைவர்கள் டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுக்களுக்கு முன்னால் சமஷ்டியை ஆதரித்திருந்தார்கள். தீர்வாக கூறினார்கள். ஆகவே சிங்கள மக்கள் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்றுகூறுவதற்கில்லை.

நாடு பிளவு படாதிருக்க வேண்டுமென சிலர் கருதுவதால் தான் ஒற்றையாட்சி என்ற பதம் பிரதானமாக இருக்கவேண்டுமென கருதுகிறார்கள். ஆட்சி அதிகாரங்கள் சமஷ்டி அடிப்படையில் பகிரப்பட்டால் நாடு பிளவு படுவதற்கு வாய்ப்பில்லை, தேவையும் ஏற்படாது.

ஒற்றையாட்சியிருந்தாலே நாடுபிளவுபடுவதற்கான அபாயமுண்டு. இதுவே எமது உறுதியான நிலைப்பாடு. இதனை பிரதான கட்சிகளுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் எடுத்துக் கூறுவோம்.

அதிகாரங்கள் பகிரப்படுவது குறித்த செயற்பாட்டில் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற முத்திரைகள் அவசியமில்லை. கருப்பொருள் தொடர்பிலேயே நாம் அதிகமான கவனத்தைச் செலுத்துவோம்.

அவ்வாறான முத்திரைகளின் அவசியமும் சில சமயங்களில் தேவைப்படலாம். அதனைவிடவும் கருப்பொருள் மிகவும் முடியாது.

அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை மட்டுமல்ல. எந்த தரப்பாகவிருந்தாலும் அவர்களின் யோசனை எம்மிடத்தில் கையளிக்கப்படுமிடத்தில் அதனை பரிசீலிப்பதற்கு தயாராகவுள்ளோம்.

மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு அரசாங்கம் குழுவை நியமித்திருக்கிறது. அவர்கள் அங்கும் தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். எம்மிடத்திலும் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் மக்களின் ஆணையை சுமந்து நிற்கும் அரசியல் கட்சியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு விடயத்தில் அதற்கிணங்கவே செயற்படும். அந்த ஆணைக்கு மாறான கருத்துக்கள் எமக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்கள் நிராகரித்த தீர்வு திட்டங்கள் அதிகமுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் முன்வைத்த தீர்வு திட்டங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு நிராகரிக்கப்பட்ட திட்டங்களை வேறொரு அமைப்பின் ஊடாகவோ வடிவத்திலேயோ முன்வைத்தால் ஏற்கமாட்டோம். ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

அரசியல் தீர்வு தொடர்பாக அதிகாரபூர்வமான கலந்துரையாடல் எவையும் நடைபெறவில்லை. எனினும் அதிபர் தேர்தலுக்கு பின்னரும், அண்மைக்காலத்திலும் சில பேச்சுக்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவது என்பது முக்கியமான விடயமல்ல. 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பாக செயற்படுகிறோம். 225 பிரதிநிதித்துவத்தில் இந்த எண்ணிக்கை முக்கியமானதாக இல்லாது விட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தவேண்டும். கூட்டமைப்பை விட்டு எந்த தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றினாலும் அது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் அரசியல் திர்வு தொடர்பாக பேச்சு நடத்துவோம்.

அரசில் கைதிகள் விடுதலை தொடர்பாக செயற்பாடுகளில் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் திருப்திகரமாகவில்லை. புதிய சட்டமா அதிபர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் முன்னெடுக்கப்படும். நாம் தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கிவருவதோடு பேச்சுக்களையும் முன்னெடுத்து வருகிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

வழிமூலம் – வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *