மேலும்

பெரும் போராட்டத்துக்குப் பின் சிறைக்கு அனுப்பப்பட்ட ஞானசார தேரர் – பிக்குகள் அடாவடித்தனம்

gnasara-remandஹோமகம நீதிமன்றத்தினால் நேற்று முற்பகல் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுமாலையே சிறப்பு அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து பெருந்திரளான பிக்குகள் நேற்று ஹோமகம நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினர். இதனால் ஹோமகம பிரதேசம் முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.

சுமார் 500 இற்கும் அதிகமான பௌத்த பிக்குகள் ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறும் இல்லையெனின், அவருடன் விளக்கமறியலில் வைக்குமாறும் கோசங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் நீதிமன்றத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனால் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்படவிருந்த வழக்குகள் பிற்போடப்பட்டதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் நேற்று முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டன.

நேற்று நண்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், ஆறு மணி மணித்தியாலங்களாக நீடித்தது. இதனால், ஞானசார தேரரை நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை உருவானது.

ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பிக்கு ஒருவர் சிறைச்சாலை பேருந்தின் பின் சக்கரத்துக்கு குறுக்காக படுத்திருந்தார். இதனால், சிறைச்சாலை பேருந்தை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

gnanasara-remand (1)

gnanasara-remand (2)

மூன்று பௌத்த பிக்குகள் தமக்கு தாமே தீ வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியபடி கையில் மண்ணெண்ணெய் கொள்கலன்களுடன் தயாராக இருந்தனர்.

சில பௌத்த பிக்குகள் ஒலிபெருக்கிகளின் உதவியுடன் ஞானசார தேரரை உடன் விடுவிக்குமாறு கூச்சலிட்டபடி இருந்தனர். பௌத்த பிக்கு ஒருவர் பெற்றோல் குண்டுடன் காணப்பட்டார்.

பௌத்த பிக்குகளின் குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹோமகம நீதிமன்றப் பகுதிக்கு, காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர். கலகத் தடுப்பு பிரிவினர், தடிகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாங்கிகளுடன் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற வளாகத்தினுள்ளேயும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

காவல்துறை அதிகாரிகள் பிக்குகளுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல மணி நேரங்களாக முயற்சிகளை முன்னெடுத்த போதும், அவர்கள் அதற்கு இணங்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமாலை 5.35 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களை அகற்றி விட்டு, சிறப்பு அதிரடிப்படையினர் மாற்று வாகனம் ஒன்றின் மூலம், நீதிமன்றத்தில் இருந்து ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, பௌத்த பிக்குகளும் பொதுமக்களும் காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் மீதும், நீதிமன்றத்தின் மீதும் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் சில சிறப்பு அதிரடிப்படையினர் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

இதையடுத்து, சிலர் ஹோமகம பொலிஸாரால், கைது செய்யப்பட்டனர். ஹோமாகம பகுதியில் தொடர்ந்தும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *