சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம்
சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறைகளின் போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான, பொறுப்பு மற்றும் கடப்பாட்டை நிறைவேற்றத் தவறியதற்காக, எதிர்க்கட்சியினால இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விவாதம் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்றும், இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த 28 பேரில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்தனர் என்றும், 11 பேர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர் என்றும் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 10 பேரும் துரித நடவடிக்கை படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
