முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரணதண்டனை
புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகளைக் கொண்ட, மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் மாலையில், அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவினால், மறுநாள் நடத்தப்படவிருந்த தாக்குதல் குறித்து பிரதிவாதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்புச் செயலர் என்ற ரீதியில் அதனைத் தடுப்பதற்கு பிரதிவாதி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவருக்கு புலனாய்வு கூட்டத்தைக் கூட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும்.
அதேபோல முப்படையினருடன் கலந்துரையாடி தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
எனினும், அவர் அத்தகைய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
இதன் மூலம், இந்தத் தாக்குதலினால் கொலைகள் நிகழக்கூடும் என்பதை நன்கு அறிந்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு பிரதிவாதி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கமைய கடமையைப் புறக்கணித்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனினும், சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கமைய பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இருப்பினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதே குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து இருவரும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
