மேலும்

இந்தியாவின் 350 மில்லியன் டொலர் கடனை நிராகரிக்கிறது சிறிலங்கா

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ  இந்தியா வழங்க முன்வந்த நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடரில் இருந்து  சிறிலங்கா மீண்டெழ உதவும் வகையில், 450 மில்லியன் அமெரிக்க டொலர்  புனரமைப்பு மற்றும் நிவாரணத் தொகுப்பை வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரால் அறிவிக்கப்பட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் மேற்பார்வையில், கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாடு இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது.

350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன்களையும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி மானியமாகவும் இந்த உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சாலைகள், பாலங்கள், வீடுகள், சுகாதார வசதிகள் மற்றும் விவசாயத் துறை ஆகியவற்றின் புனரமைப்பிற்கு இந்த நிதி நேரடியாக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர், புனரமைப்புப் பணிகள் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்திற்குள் நிலவும் நிர்வாகத் திறமையின்மையே இந்தத் தாமதங்களுக்குக் காரணம் என இந்திய அதிகாரிகள் கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், சிறிலங்கா அரசாங்கத்திற்குள் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்தியாவிடமிருந்து 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற வேண்டாம் என  முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பீட்டளவில் கடனுக்கு அதிக வட்டி வீதம் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேவேளை சிறிலங்கா தொடருந்துக்கு 22 டீசல் இயந்திரங்களை இந்திய அரசாங்கத்திடமிருந்து மானியமாகப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், இந்த இயந்திரங்களைப் பெறுவது தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகள் தங்களது முன்மொழிவுகளையும் தேவைகளையும் இந்திய அரசாங்கத்திடம் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த இயந்திரங்களை மானியமாக வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது.

அதேவேளை,  இந்தோ-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாட்டைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்து இந்தியா கவலைகளை எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுங்கவரி அல்லாத தடைகள், ஒருதலைப்பட்சமான கட்டுப்பாடுகள் மற்றும் விநியோக வரம்புகள் குறித்து இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகள், உடன்பாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை மெதுவாக்கியுள்ளன என்று இந்தியா கவலைப்படுவதாக  கூறப்படுகிறது.

இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஏற்படும் மெதுவான முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இந்தியா அதிகளவில் கவலை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *