மேலும்

இன்று 3 பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகும்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின்  போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின்  மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதும், பல்வேறு முக்கிய மூலோபாயத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுமே இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணத்தின் முதன்மை நோக்கம்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்கும்போது மூன்று உடன்பாடுகள் பரிமாறப்படவுள்ளன.

முதலாவது உடன்பாடு, சிறிலங்காவின் தேசிய மாணவர் படையணிக்கும் (National Cadet Corps) இந்தியாவின் தேசிய மாணவர் படையணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடாகும்.

இரண்டாவது, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரிக்கும் (National Defence College) புதுடில்லியில் உள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடாகும்.

மூன்றாவது, சிறிலங்கா விமானப்படையினால் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பராமரிப்பதற்கு இந்தியா வழங்கும் ஆதரவு தொடர்பானதாகும்.

2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சிறிலங்கா விமானப்படைக்கு 40 மி.மீ L70 வான் பாதுகாப்பு ஆயுதங்களின் 24 தொகுதிகளை இந்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.

அவற்றில் 18 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான பராமரிப்புப் பணிகளை இந்தியா அண்மைய ஆண்டுகளில் ஏற்கனவே இலவசமாக மேற்கொண்டிருந்தது.

புதிய உடன்பாட்டின் கீழ், எஞ்சிய ஆறு L70 வான் பாதுகாப்பு ஆயுதங்களுக்கும் இந்தியா இலவசமாகப் பராமரிப்பு ஆதரவை வழங்கும்.

இந்த உடன்பாடுகள் சிறிலங்கா  மற்றும் இந்தியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *