சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா துணையாக நிற்கும்
சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்றுமாலை கொழும்பில் இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் சிறிலங்காவும் நெருக்கமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இவை இருதரப்பு உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இந்தத் தீவு நாடு நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக சிறிலங்காவுடன் துணை நிற்கும்.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
தற்போது உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்தியா வழங்குகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் 2014-ல் சுமார் 2 டிரில்லியன் டொலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 4 டிரில்லியன் டொலராக விரிவடைந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 12 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 600 கோடியாக இந்திய ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அது இதுவரை இல்லாத அளவாக சுமார் 39,000 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடும் 2013-14 நிதியாண்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2025-26-ல் 7.25 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளர்.
இது நாட்டின் வளர்ந்து வரும் திறன்களையும், பாதுகாப்புத் துறையில் அதிக அளவிலான தன்னிறைவை நோக்கிய நகர்வையும் பிரதிபலிக்கிறது.
மின்னணு சாதனங்கள் மற்றும் அலைபேசி உற்பத்தி, ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொதுச் சேவைகள் ஆகிய துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
அனைத்துலக அளவில் இந்தியாவின் நற்பெயரையும் நிலையையும் வலுப்படுத்தியதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு மிக அதிகம்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே ஒரு முக்கியப் பாலமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்த நிகழ்வில் சிறிலங்காவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியாவின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



