மேலும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம்- ஆளும்கட்சிக்குள் முரண்பாடு.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி  தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் உறுப்பினரான மூத்த சட்டவாளர் லால் விஜேநாயக்க, பகிரங்கமாக எதிர்த்துள்ளார்.

தான் உறுப்பினராக உள்ள கட்சியின் முடிவெடுக்கும் அமைப்புகளால் இந்த விவகாரம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று மூத்த சட்டவாளர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பில் பேசிய லால் விஜேநாயக்க, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை விபரித்துள்ளார்.

“நான் தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது போன்ற எந்தவொரு முடிவும், நான் அங்கம் வகிக்கும் எந்தவொரு தேசிய மக்கள் சக்தி செயற்குழுவிலோ அல்லது வேறு எந்த மன்றத்திலோ எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பியபோது, ​​வாயை மூடி அமைதியாக இருக்கும்படி எனக்குக் கூறப்பட்டது.

55 ஆண்டுகளாக சட்டவாளராக பணியாற்றி வருகிறேன்.  சுமார் 60 ஆண்டுகளாக இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

எனது அரசியல் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் ஒரு நாகரிக சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பல்வேறு ஆட்சிக்காலங்களில் நீதித்துறை சுதந்திரத்திற்காகப் போராடினேன்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாகவே தற்போதைய முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.

அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இது ஒரு தன்னிச்சையான மற்றும் நாகரிகமற்ற முடிவு,” என்றும் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *