மேலும்

கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

kanagapuramகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச்  செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமரின் வசமுள்ள, அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சே, கிளிநொச்சி பிரதேச சபை மூலம் முன்னெடுக்கப்படும், மாவீரர் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து கனகபுரம் துயிலுமில்லத்தின் சுற்றுச் சுவரை அமைப்பதற்கு, 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் துயிலுமில்லங்களை தாவரவியல் பூங்காக்களாக பராமரிப்பதற்கும், இந்த நிதி ஒதுக்கீட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

kanagapuram

அதேவேளை, பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில், துயிலுமில்ல புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்தப் பணிகள் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *