விதையாக வீழ்ந்தோரை நினைவில் கொள்வோம்
சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி
இன்னுயிர்களை ஈந்தவர்களை
நினைவில் கொள்ளும் நாள்.
தேச விடியலைத் தேடிய
பாதைகள் பல;
பயணம் ஒன்று தான்.
காடுகள், மேடுகள்,
கடும் வதைமுகாம்கள்,
ஆர்ப்பரித்த கடல் அலைகள்,
வானையும் கிழித்து
வீழ்ந்து விதையாகினர்.
கல்லறையைக் கூட விட்டுவைக்கா
பேயாட்சி அரசின்
அடக்குமுறைக்கும் மத்தியில்- தமிழர்
நெஞ்சறையில் இடம்பிடித்தவர்கள்.
முகம் தெரிந்தும், தெரியாமலும்
மூச்சடங்கினாலும்,
வீச்சுடன் எங்கும்
விழுது பரப்பியவர்கள்.
விடுதலை ஒன்றே இலட்சியம்
சுதந்திர ஈழமே ஒரே மூச்சு –
வாழ்ந்ததும் அதற்கே,
களமாடி வீழ்ந்ததும் அதற்கே.
ஈழமண்ணின் விடுதலைக்காய்
விதையாகிப் போன
மாவீரர்கள், மக்கள்
அனைவரையும்
இந்த நாளில் நினைவு கூருகிறோம்.
– புதினப்பலகை குழுமத்தினர்
27.11.2017