மேலும்

11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

ruwan-wijewardenaமுன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தலைமையகங்களை பத்தரமுல்லவில் ஒரே இடத்துக்கு மாற்ற முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எடுத்த முடிவும் அத்தகைய ஒன்று தான். அது பாராட்டப்படக் கூடிய ஒன்று அல்ல.

இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணி சங்கிரி-லா விடுதிக்கு விற்கப்பட்டது. தற்போதைய இடத்தை விட்டு நாங்கள் விரைவில் வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

11 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை விடுதலை செய்த மகிந்த ராஜபக்சவின் முடிவும் பாராட்டத்தக்கதல்ல. கட்டுநாயக்க விமான நிலையம், இராணுவ முகாம்களைத் தாக்கியவர்களும் கூட, எந்த விசாரணைளுமின்றி விடுவிக்கப்பட்டனர். இந்த முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வதற்கு இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த விடயம் அமைச்சரவையில் உள்ளது, அதுபற்றி அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும்.

டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னதாக, எமது முடிவு ரஷ்யாவுக்குத் தெரியப்படுத்தப்படும். அதற்குப் பின்னரே கப்பலைக் கட்டும் பணி தொடங்கப்படும். கப்பலைக் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும். அது புதிதாக இருக்க வேண்டும்.

முதலில் ரஷ்யா வழங்க முன்வந்த போர்க்கப்பலை நாங்கள் நிராகரித்து விட்டோம். அது ஆழ்கடல் ரோந்துக் கப்பல். அதுபோன்ற கப்பல்கள் பல எம்மிடம் உள்ளன.

அவுஸ்ரேலிய கடல் வரை செயற்படக் கூடிய வகையிலான ஆழ்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய போர்க்கப்பல்களே எமக்குத் தேவை.

அமெரிக்காவும் எமக்கு இன்னொரு போர்க்கப்பலை வழங்கவுள்ளது. எமது கடல் பகுதியைப் பாதுகாப்பதற்கு, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கூட எமக்கு இராணுவ கப்பல்கலை வழங்கியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரின் வழிநடத்தலில் நாம், ஐ.நா அமைதிப்படைக்கு 200 படையினரை அனுப்ப முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 600 படையினரை அனுப்பும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.

இரணைமடு இராணுவ முகாம் மூடப்படவில்லை. நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான விடுதி மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *