மேலும்

சிறிலங்கா அருகே ஈரானிய நாசகாரியை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி

ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டெனா, சிறிலங்காவுக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டோர்பிடோ தாக்குதலில் கடலில் மூழ்கியுள்ளது.

இந்த தாக்குதல் சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார கடல் எல்லைக்குள்  இடம்பெற்றுள்ளது.

காலிக்கு தெற்கே 40 கடல் மைல்கள் தொலைவில்  நேற்றுமுன்தினம் இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஈரானிய போர்க்கப்பலே அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டது.

சுமார் 180 கடற்படையினர் பணியாற்றிய ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக உதவிக்கு விரைந்த சிறிலங்கா கடற்படை 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளது.

மேலும், 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின்  தெற்கு கடற்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டோர்பிடோ தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக,  அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்தது, அது அனைத்துலக கடற்பரப்பு  பாதுகாப்பானது என்று நினைத்திருக்கலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் ஒரு எதிரி கப்பல் குறிவைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக கடல்சார் கடமைகளின் கீழ் சிறிலங்கா கடற்படையினால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கண்காணிப்புக்காக பீச் கிராப்ட் விமானத்தை சிறிலங்கா கடற்படை அனுப்பிய போது, கப்பல் முழுமையாக மூழ்கியிருந்தது என்றும்,  நீரின் மேற்பரப்பில் ஒரு எண்ணெய் படலமே காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 மீற்றர் நீளமாக ஈரானிய நாசகாரி கப்பல், புதிய மற்றும் மிகவும் மேம்பட்ட கடற்படை போர்க்கப்பலாகும்.

இதனிடையே காயமடைந்த ஈரானிய கடற்படையினரை பார்வையிடுவதற்கு ஈரானிய தூதரக அதிகாரிகள் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *