மேலும்

சிறிலங்கா அதிபரின் கருத்து – பிரித்தானிய அதிகாரிகளிடம் கூட்டமைப்பு அதிருப்தி

sumanthiranஉள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் இருந்தனர். அன்று காலை இரா.சம்பந்தன் எடின்பேர்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அதேவேளை, சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன்  கிளைத் தலைவர் டி.இரத்தினசிங்கத்துடன் இணைந்து, கிங் சார்ள்ஸ் வீதியில் உள்ள வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் சிறிலங்கா பிரிவு அதிகாரிகளைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிபிசி செவ்வியில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று தெரிவித்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய அதிகாரிகளிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பிரித்தானிய அதிகாரிகள், உள்நாட்டு உணர்வுகளைச் சமாளிப்பதற்காக சிறிலங்கா அதிபர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று வாதிட்டதுடன், இது கொள்கை மாற்றமாக தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

எனினும், அடுத்த சில நாட்களில் இது தெளிவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேனின் கொழும்புக்கான பயணத்தையே அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் பின்னர், சம்பந்தனுடன் இணைந்து கொள்வதற்காக சுமந்திரன் எடின்பேர்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அவர்கள், ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு முறை குறித்து எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *