மேலும்

பாகிஸ்தான் போர் விமானங்களை சிறிலங்கா வாங்காது – இந்திய ஊடகம்

jf17_thunder_l7பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, சீனாவில் வடிவமைக்கப்பட்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்காவின் முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடமே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் 4ஆம் நாள் தொடக்கம் 6ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதன்போது, சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரித்துள்ள மூன்றாவது தலைமுறைப் போர் விமானமான ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்கு கொள்வனவு செய்ய அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று, ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, கொழும்பு அத்தகைய முடிவை எடுப்பதற்கு இரண்டு காரணிகள் தடையாக இருக்கும் என்றும், தமது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்காவின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது தடை, இந்தியாவின் எதிர்ப்பு என்றும், இரண்டாவது தடை, இந்த போர் விமானங்களின் விலை என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜேஎவ்-17 போர் விமானம் ஒன்றின் விலை 35 மில்லியன் டொலராகும்.

அதேவேளை, பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்க சிறிலங்கா எண்ணம் கொண்டிருப்பது தொடர்பாகவோ, இதற்குப் போட்டியாக,  இந்தியா தனது தேஜஸ் போர் விமானங்களை வழங்க முன்வந்திருப்பதாகவோ தாம் அறியவில்லை என்று அதிகாரபூர்வ இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேஜஸ் போர் விமானங்கள் பிரச்சினைக்குரியவை என்று இலங்கையர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பர். இதில் குறைபாடுகள் இருப்பது இந்திய விமானப்படையால் கண்டறியப்பட்டதையடுத்து, அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, பாகிஸ்தானின் ஜேஎவ்-17 போர் விமானங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு தொடக்கம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தன்னிடம் உற்பத்தி வசதிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்த பாகிஸ்தான் இவற்றை விற்க வேண்டியுள்ளது. இவற்றை கடனுக்குக் கூட விற்கலாம் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடனுக்கு விற்கப்பட்டாலும் கூட அனைத்துலக அளவில் கடன்களில் சிக்கியுள்ள சிறிலங்கா அதனைத் திருப்பிச் செலுத்துவது சிக்கலானது.

மேலும், தனது கடற்பகுதியை பாதுகாப்பதற்கு, இன்னும் காத்திரமான நீலக்கடல் கடற்படையை உருவாக்குவதற்கு ஆர்வம் காட்டும், அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய அனைத்துலக கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் அர்த்தமுள்ள பங்கை ஆற்ற விரும்பும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர் விமானங்களை வாங்க சிறிலங்கா விமானப்படைக்கு அனுமதியளிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *