மேலும்

கனவு மெய்ப்பட வேண்டும்…!

new-year-20162016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும்  தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட   பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது.

சென்ற ஆண்டு- துன்பங்கள், துயரங்கள், வரலாற்றுத் திருப்பங்கள் என்பனவற்றை மட்டுமன்றி, படிப்பினைகளையும் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது.

பிறந்துள்ள புதிய ஆண்டு , இலங்கைத் தீவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கப் போகிறது.

ஏனென்றால், இந்த ஆண்டில், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் அரசியல் தலைமைகள் இருக்கின்றன.

*******

”………….காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்து நிற்பதில்லை. அது எம்மைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.  காலம், பதில்களைக் காத்து நிற்பதில்லை. அது கடந்துபோகும்.  அதைக் கடந்து போவது தான் நம் முன்னுள்ள சவால் ”

என்றான்  உலக மானுடவியல் கோட்பாட்டின் தந்தை பென்சமின் பிராங்ளின். அவனது இந்த செய்தி  எமக்கு பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.

உலக அரசியல் அரங்கில் போரிடும் கலை எக்காலத்தும் ஒரே வகையினதாய் இருந்ததில்லை. அது காலந்தோறும் மாறியே வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரையடுத்து  உருவான இரு-மைய உலகில் போர் என்பது கெடுபிடி யுத்தமாகக் கட்டமைக்கப்பட்டது. பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின் உருவான ஒரு-மைய உலகம், உலக காவல்காரன் என்ற வடிவத்தை எடுத்தது.

விளைவு  அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் அடுத்து; ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ ‘நாகரிகங்களுக்கிடையிலான மோதல்’ என்ற கருத்தமைவால் உருப்பெற்றது.

உலகப் பொருளாதார நெருக்கடியுடன் தொடங்கிய ஒரு-மைய உலகின் தேய்வு -பல்-மைய உலகின் தோற்றத்துக்கு வழிசெய்தது.

இந்நிலையில், நேரடியான போர், எதிர்காலத்தில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தக்கவைக்க நல்ல வழிமுறையல்ல என்பதை முடிவற்று நீளுகிற  உலகு தழுவிய போர்மேகங்கள்  தெளிவாகக் காட்டியுள்ளது.

இந்த சுழற்சிக்குள், அதன் கோரப் பற்களுக்குள் மானுடம் சுடரும் விடுதலையை வேண்டி நிற்கும் ஈழத்தமிழினமும் சிக்கிக் கொண்டமையும் ஓர் துர்ப்பாக்கியமே.

******

சிறிலங்காவின் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு ஆண்டு ஆகின்ற நிலையில், இந்த ஆட்சிமாற்றத்துக்குக் காரணமாகிய முக்கிய தரப்பினரான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும், அடிப்படைத் தேவைகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இராணுவமயநீக்கம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, முதலீடுகள் என்று தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளின்  நீண்டபட்டியல் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன.

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு ஒரு ஜனநாயக வெளியைத் திறந்து விட்டிருப்பினும், முழுமையாக அந்த வெளியை அனுபவிக்கும் சூழலையோ அவர்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சூழலையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக, வாக்குறுதி  அளித்தே, சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார் மைத்திரிபால சிறிசேன.

அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளோ, அரசியல் பிரச்சினைகளோ முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. தீர்க்கப்படுவதற்கான முயற்சிகளும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்தப் புதிய ஆண்டில் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் கொடுத்து வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கிறது.

எனவே, சிங்கள மக்களின் அரசியல் தலைமைக்கும், தமிழ் மக்களின் அரசியல் தலைமைக்கும், இது ஒரு முக்கியமான ஆண்டு.

இனப்பிரச்சினைக்கு  நிலையான அரசியல் தீர்வைக் காண வழிவகுக்கும், அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ள ஆண்டாக இது அமைகிறது.

ஆனால், இந்த  அரசியலமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தளவுக்கு தீர்வைத் தரப்போகிறது, எத்தகைய தீர்வை முன்மொழியப் போகிறது  என்று தெரியவில்லை.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும்  ஒன்றாக இந்த புதிய அரசியலமைப்பு அமைவதற்கான சாத்தியம்இருக்குமா என்பது சந்தேகம் தான்.

இருதரப்பின் வாக்குறுதிகளுக்கும், இன்னும் சரியாக 365 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் இருக்கிறது.

இந்த வகையில், 2016 தமிழர்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டு தான்.

இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை இரண்டு அரசியல் தலைமைகளும் நிறைவேற்றுமா?

*******

2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு நம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக, அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அரசு கொடுத்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய ஆண்டும் இது தான்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான – நடுநிலையான விசாரணைப் பொறிமுறை  ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துடன் சிறிலங்கா அரசு இணங்கியிருக்கிறது.

ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய- கலப்பு விசாரணைப் பொறிமுறையையே வலியுறுத்தியிருந்தாலும், சிறிலங்கா அதனை விடுத்து, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்று பற்றியே பேசி வருகிறது.

ஜெனிவாவில் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு ஒப்புக்கொண்டு விட்டு, இப்போது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்று வழக்கமான பாணியில் நாவைப் புரட்டும் சிறிலங்கா அரசாங்கம், இன்னமும், எந்த விசாரணைப் பொறிமுறையையும்உருவாக்கவில்லை.

பொறுப்புக்கூறல் விசாரணைக்காக ஐ.நா பேரவை அளித்துள்ள காலஅவகாசம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு, ஜனவரியில் என்றும், மார்ச்சில் என்றும் புதிய விசாரணைப் பொறிமுறையை வடிவமைக்கும் காலத்தை மாற்றி மாற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

தெற்கின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், நம்பகமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கே, மகிந்த அணியினரின் அழுத்தங்களுக்கு அச்சப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன அரசாங்கம்,  சுதந்திரமான  ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி, நம்பகமான விசாரணையை எப்படி முன்னெடுக்கப் போகிறது?

அனைத்துலக சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அடுத்த ஆண்டு நிறைவேற்ற வேண்டுமாயின், இந்த ஆண்டில் எப்படியாவது ஒரு நம்பகமான விசாரணைப் பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியாக வேண்டும்.

அதனை எப்படிச் செய்யப் போகிறது?- அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது?

*****

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக- ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2016 ஒரு முக்கியமான ஆண்டு.

நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் கூட தமிழ்மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற கூட்டமைப்பை உடைத்து அதன் அரசியல்பலத்தை சிதைக்கும் பலமுனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் தான் புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு  செய்து, அதனை ஓன்று திரண்ட அரசியல் சக்தியாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கத் தவறிய, கூட்டமைப்பின் தலைமைக்கு இது சோதனை மிக்க காலப்பகுதியே.

ஒரு பக்கத்தில் சிறிலங்கா அரசாங்கத்திடம், இருந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ள நிலையில், இன்னொரு பக்கத்தில் உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்கும் போராட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தம்மைப் பலப்படுத்துமாறு மக்களின் ஆணையைக் கோரிய, கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே, அந்த ஆணைக்கு விரோதமான முறையில், கூட்டமைப்பை பலவீனப்படுத்த முனைந்திருப்பது தமிழ்மக்களின் சாபக்கேடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குறைந்து வந்த ஒற்றுமை இப்போது எங்கே நிற்கிறது என்று கூடத் தெரியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு மாற்றம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்வாங்கி  பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரும்பொருத்தமான அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு கூட்டமைப்புக்கே இருக்கிறது.

அத்தகைய பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதில் கூட்டமைப்பு எந்தளவுக்கு தயார்படுத்தல்களுடன் இருக்கிறது என்பது கேள்விக்குரிய விடயம் தான்.

பங்காளிக்கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை திருப்திகரமாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் கூற முடியாதநிலை இன்னமும் நீடிக்கிறது.

2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் காண்பதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் என்ற சவாலை மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற சவாலை எதிர்கொள்வதும் முக்கியம்.

அத்தகையதொரு நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னைத் தயார்படுத்தி வைத்திருக்கிறதா?

*****

இன்றைய உலகில்,  ஓடும் இயந்திரப் பற்களுக்குள் தம் மானுடத்தைத் தொலைத்துவிட்டு இருப்பின் தேடலுக்காய் வாழும் சமூகமாய் நிற்கின்றனர் புலம்பெயர் தமிழர்.

இவர்கள் தாயகக் கனவு என்ற இலட்சியத்திலும் கொள்கையிலும் உறுதுணையோடு நிற்கின்றனர். எனினும் தமிழர் தேசம் விடுதலை பெறவேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக அவர்கள் செல்லும் பாதை சரியானது தானா என்ற ஓர் ஐயப்பாடும் எழுந்தே நிற்கிறது

2009 ற்கு முன் புலம்பெயர் தமிழ்சமூகம் இரு நிலைகளைக் கொண்டிருந்தது.

ஒன்று- பேராட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரவு நல்குவோர்.

இரண்டாவது- நிலை போராட்டத்தையும் அதை முன்னெடுப்போரையும் விமர்சிப்போர் அல்லது அழிக்க நினைப்போர்.

ஆனால் இன்று நிலை வேறு. ஒருமித்த தளத்தில் நின்றோரும் நிற்போரும் ஒருவருக்கு ஒருவர் பகைமை உணர்வோடு பயணிப்பதையும், எதிரிக்கு  எதிரி நண்பன் என்ற நிலையில் இருப்பதையும் உணர முடிகின்றது.

இந்த நிலை மாறவேண்டும். அனைவரும் தாயக விடுதலை யின் இறுதி இலக்கு நோக்கிய பயணத்தில் ஒருமைப்பாட்டுடனும் ஆரோக்கியமான விமர்சனங்களுடனும் கருத்துக்களை உள்வாங்கி செயற்றிட்டங்களை உருவாக்கி செயற்படுவதே ஆரோக்கியமானது .

ஒருகாலத்தில் ஒன்றுதிரண்ட தமிழ்மக்களின் பேரெழுச்சியினால் உருவான ஒற்றுமையைக் கண்டு  வியந்த உலகுக்கு  அதே செய்தியை சொல்வதற்கு  வழிவகுக்கும் ஆண்டாகவும் 2016அமைய வேண்டும்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என உரக்க கோசம் எழுப்பும் நாம் ஒருமித்த கருத்தோடு, கிளைகள் வேறானாலும் செயல் ஒன்றே என்ற உறுதிப்பாட்டோடு உழைப்பதன் மூலம் எதிரி எம்மை பார்த்து அச்சப்படும் சூழலை உருவாக்குவதற்கும் இந்த ஆண்டு வகை செய்யும் ஆண்டாக அமையுமா?

*****

பல்வேறு கேள்விகளோடு தொடங்கியிருக்கும் புதிய ஆண்டு தமிழ் மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைப்பதாகவும், அவர்கள்தம் கனவுகளை மெய்ப்பட வைப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்”மகாகவி பாரதியார்

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,

–   புதினப்பலகை குழுமத்தினர்

01-01-2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *