ரஷ்யாவின் மிர் கொடுப்பனவு முறையை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரிப்பு
ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளினால், சர்வதேச பணப் பரிமாற்ற முறைகளில் இருந்து துண்டிக்கப்பட்டதால், ரஷ்யா மிர் கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்தியது.
பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, ரஷ்யா இந்த முறையை முன்மொழிந்தது.
அண்மையில் ரஷ்யாவுக்குப் பயணம் செய்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, ரஷ்யாவின் இந்த கொடுப்பனவு முறையை அங்கீகரிக்குமாறு சிறிலங்கா மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதற்கு அங்கீகாரம் வழங்க இரண்டு முறை மறுத்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்காத் தூதுவர் உதயங்க வீரதுங்க, சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக மக்கள் வங்கிக்கும் ரஷ்ய வங்கிக்கும் இடையிலான ரூபிள் – ரூபாய் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.