ஐ.நா பொதுச் சபையில் பதுங்கிக் கொண்டது சிறிலங்கா
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.
ரஷ்யா, வடகொரியா, பெலாரஸ், நிக்கரகுவா, சிரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து இருந்து விலகியிருந்தன.
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தை மீறி, டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகள் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த இணைப்பை எந்தவொரு நாடும், சர்வதேச அமைப்புகளும் அங்கீகரிக்க வேண்டாம் என்றும், கோருகின்ற இந்த தீர்மானம், அதன் இணைப்புப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறும், ரஷ்யாவிடம் கோருகிறது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை, ரஷ்யா தனது வெட்டு (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தோற்கடித்த நிலையில், ஐ.நா பொதுச்சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.