மேலும்

வரலாற்றில் மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் – இரா.சம்பந்தன் வாழ்த்து

sampanthanதேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள  தீர்வை எட்டுவது, நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டுவது உள்ளிட்ட இமாலய  முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு புத்தாண்டில், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

“புதிய எதிர்பார்ப்புக்களை கொண்டு வந்திருக்கும் இந்த புதிய ஆண்டில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.

இன்னுமொரு புதிய ஆண்டை வரவேற்கும் இத்தருணத்தில் இலங்கை வாழ் பல்லின சமூகங்கள் தமது வேறுபாடுகளை களைந்து, மக்களின் உரிமைகளையும் மனித நேயத்தையும், சுதந்திரத்தையும், நல்வாழ்வையும் மதித்து பாதுகாக்கின்ற பிளவுபடாத ஒன்றுபட்ட ஒரு நாட்டை கட்டியெழுப்ப முன் வரவேண்டும் என அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.

தேசிய பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைதல், மக்களுக்கு பயன்தரக் கூடிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல், நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டல் போன்ற இமாலய பணிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் இந்த பணிகளை முன்னெடுப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நாட்டின் பல்லின மக்களின் இன, மொழி, சமய கலாசார மற்றும் ஏனைய தனித்துவமான பண்புகளை மதிப்பதன் மூலம் ஏற்படுகின்ற ஒற்றுமையை பேணுவதன் மூலமே ஒரு வளம்மிக்க நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

எனவே இந்நாட்டின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் ஒரு சிறப்பான நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காகக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *