கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – ஜனவரி 6இல் இறுதி முடிவு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கு வரவுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போதே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள கொள்கை திட்டமிடல் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆலோசகர் யங் வீகன் தலைமையிலான உயர் மட்டக் குழு, ஜனவரி முதல் வாரத்தில் கொழும்பு வரவுள்ளது.
இந்தக் குழுவினர் சிறிலங்காவின் கொள்கை திட்டமிடல் பிரதி அமைச்சர் நிரோசன் பெரேராவை உள்ளடக்கிய சிறிலங்கா குழுவுடன் வரும் ஜனவரி 6ஆம் நாள் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களின் போது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம், அம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயம் ஒன்றை ஆரம்பிக்கும் திட்டம், கொழும்பு- கண்டி நெடுஞ்சாலைத் திட்டம் என்பன தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
சீன உயர் மட்டக் குழுவினர் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பகுதிகளுக்கும் சென்று பார்வையிடவுள்ளனர்.